புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

தன்னம்பிக்கையின் சிகரம்



300 முறை எலும்புகள் முறிந்தன.ஆனால்   மனம் தளராமல் வலியுடன் போராடி, வென்ற தன்னம்பிக்கைத் தாரகை தன்யா!



முன்னேறத் தூண்டும் பேச்சாளராக இருந்து கொண்டே பல ஆன்லைன் இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருபவர் தன்யா ரவி. ‘Brave Bangle Award 2012’ மற்றும் Annual Inspired Indian Foundation (IIF) Award 2014, மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கு சேவை செய்ததற்கான தேசிய விருது.. என்று பல விருதுகளும் தன்யாவிடம் வந்து சேர்ந்திருக்கிறது. வெறும் தலைவலி வந்தால் பலரும் துடிதுடித்துப் போவார்கள். மூட்டு வலி என்றால் நடக்க முடியலையே என்று அரட்டுவார்கள். வாழ்க்கை முழுவதும் இரு சக்கர தள்ளு வண்டியில்தான் என்றாகிவிட்ட நிலையிலும் முடக்கிப் போடும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக மாறியிருப்பவர் தன்யா.

தன்யா கேரளத்தைச் சேர்ந்தவர் என்றாலும் பிறந்தது வளர்ந்தது எல்லாமே பெங்களூருவில்தான். கடந்த 29 ஆண்டுகளில் சுமார் முன்னூறு தடவைகள் தன்யாவுக்கு எலும்பு அறுவை சிகிச்சை நடந்திருக்கின்றன. ஏன்.. எதற்கு என்ன ஆச்சு என்ற கேள்விகளுக்கு தன்யாவே விளக்கம் தருகிறார்:



"நான் பிறந்தது பெங்களூருவில். பிறந்த வருஷம் 1989. அம்மாவுக்கு சுகப் பிரசவம். பிறக்கும் போது எந்த குறையும் இல்லை. சில நாட்களில் நான் தொடர்ந்து அழ ஆரம்பித்திருக்கிறேன். நிறுத்தாமல் அழுகை தொடரவே பெற்றோர்கள் என்னை மருத்துவர்களிடம் காட்டினார்கள். பலனில்லை. பல மருத்துவர்களிடம் மாறி மாறி காட்டினார்கள். ஆனாலும் எனது அழுகை நின்றபாடில்லை . கடைசியில் ஒரு டாக்டர் என்னை அரிய நோயான "ஆஸ்ட்ரோஜெனிசிஸ் இம்பர்ஃபெக்டா' (Ostrogenesis Imperfecta) தாக்கியுள்ளதாகக் கண்டுபிடித்தார்.

இந்த நோய் வந்தால் எலும்புகள் பலமில்லாமல் மென்மையாக இருக்கும். சின்ன குலுக்கலையும் தாங்க முடியாமல் ஒடிந்து போகும். எழுந்து நடக்க முடியாது... எதையும் தூக்க முடியாது. இவ்வளவு ஏன்... கை காலை வேகமாக அசைக்க முடியாது. இருமல், தும்மல் வந்தால் கூட அந்த அசைவில் எலும்புகள் ஒடிந்து போகும். அந்த அளவுக்கு எலும்புகள் சக்தியில்லாமல் அமைந்திருந்தன. இதுவரைக்கும் முன்னூறுக்கும் அதிகமாக எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். என்னால் மற்ற குழந்தைகள் போல ஓடியாடி விளையாடுவது இருக்கட்டும்... சில அடிகள் கூட நடக்க முடியாது என்றாகிவிட்டது. தொடர் எலும்பு முறிவு ஏற்பட்டதினால், நான் வீட்டில் இருந்த நாட்களைவிட அதிக நாட்கள் மருத்துவமனையில்தான் வசித்தேன்.



சில தருணங்களில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வழியில் மீண்டும் உடலில் எங்காவது எலும்பு உடைந்து போகும். வலியால் அலறுவேன். வீட்டிற்குப் போகாமல் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்புவோம். இப்படி பல முறை நடந்துள்ளது. இந்த நோய் வந்தால், "ராடிங்' சிகிச்சை என்றுள்ளது. அதை எனக்கு பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை அமையவில்லை. அப்போது போதிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இல்லாமல் போனது எனது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். விதி எனக்காக ஒன்றை எழுதி முடித்துவிட்டதே! பெற்றோர்களோ எனக்காக மிகவும் சிரமப்பட்டார்கள். பல டாக்டர்கள்.. பல மருத்துவமனைகள் கண்டாகிவிட்டது. கடைசியில் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சென்றோம். நிலைமை கொஞ்சம் மாறியது என்றாலும் என்னால் நடக்க முடியவில்லை.

அதனால் நான் பள்ளிக்குப் போவதை பெற்றோர்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். நான் சுட்டித்தனமாகப் பேசுவேன். அதனால் அருகில் வசித்து வந்த விக்டோரியா ஆண்ட்டிக்கு என்மேல் கொள்ளைப் பிரியம். தனது மகள்களுடன் வீட்டிற்கு வந்து அந்தக் குழந்தைகள் முன்னிலையில் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். அவரது குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தது போலாச்சு.. எனக்கும் சொல்லிக் கொடுத்தது மாதிரியாச்சு. ஆண்டுகள் ஓடின...

ஆனால் எனது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. உருவமும் சிறு பிள்ளை வடிவத்தில் நின்று கொண்டது. விக்டோரியா ஆண்ட்டியின் பயிற்றுவிப்பில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்திலிருந்து ஆயத்த படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றேன். புதினம் எழுதுவது எப்படி என்ற சான்றிதழ் தேர்விலும் தேர்ச்சி பெற்றேன்.

தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளும், ஆய்வுகளும், ஆலோசனைகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன. சிகிச்சைகள் எனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளாக மாறியிருந்தன. பத்து வயது வரை வலியை உணர முடியாமல் இருக்க மருந்து மாத்திரைகள் தந்து வந்தார்கள். பிறகு வலியைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று பெயின் கில்லர் மாத்திரைகளை விலக்கிவிட்டேன்.

"இணையம் எனக்கு அறிமுகமானது எனது வாழ்க்கையின் ஒரேயொரு நேர்மறை திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். மாற்றி யோசித்து வாழ்க்கையை நமக்கு பொருந்திப் போகிற மாதிரி மாற்றிக் கொள்வதும் சாத்தியம்தான் என்று இணையம் என்னை ஒப்புக் கொள்ள வைத்தது. வாழ்க்கையின் நோக்கம் நன்றாக வசதியாக உல்லாசமாக வாழ்வது மட்டுமில்லை. கிடைத்த வாழ்வை எதிர் கொள்வதும்தான் என்பதை புரிந்து கொண்டேன். இசை என்னை என் மனதை லேசாக்குவது போல உணரத் தொடங்கினேன். இணையம் மூலம் எனக்கொரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டேன். யேசுதாஸ். சித்ரா பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்பேன். போகப் போக யேசுதாஸ். சித்ரா அறிமுகம் ஏற்பட்டு அவர்கள் குடும்ப நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.

இணையம் மூலமாக வயநாட்டில் "பினு' என்ற பையனுக்கு என்னைப் போலவே நோய் தாக்கியிருப்பதை அறிந்தேன். சிகிச்சை செய்ய பண வசதியில்லாமல் கஷ்டப்படுவதை அறிந்ததும், "என்னைப் போல பினுவும் தளர்ந்து விழுந்துவிடக் கூடாது... நடக்க வேண்டும்.. நாலு பேரை பார்க்க வேண்டும்.. பேச வேண்டும்... பழக வேண்டும்.." என்பதற்காக இணையம் மூலம் பினுவுக்காக நிதி திரட்டத் தொடங்கினேன்.

அப்போதுதான் திருவனந்தபுரத்தில் சமூக சேவைகள் செய்துவரும் லதா நாயர் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாகவும் பினுவிற்காக நிதி திரட்டினேன். இந்த பண உதவியால் பினுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தவழ்ந்து மட்டுமே போக முடியும் என்ற நிலையிலிருந்து "நடக்க உதவும் கைத்தடி' கொண்டு பினு மெல்ல மெல்ல நடக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலையும் பார்க்கிறார். இது ஆச்சரியமான முன்னேற்றம்.

இந்த நிகழ்வின் மூலம் எனக்கு சில உண்மைகள் பாடங்கள் தெரியவந்தது. உதவி செய்வதற்கு விசால மனம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். உதவி வேண்டி வாழ்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு துருவங்களை இணைக்க பாலம் அமைவதில்லை. அப்படி பாலம் அமைந்தால் கஷ்டப்படுகிறவர்களுக்கு ஒரு விடியல் .. வாழ ஒரு நம்பிக்கை கிடைக்கும். சக்கர நாற்காலியில் இருக்கும் என்னாலும் பாலமாக ஆக முடிந்ததே..! இந்த உதவி மூலமாக எனக்கு இன்னொரு அவதாரம் எடுக்கவும் முடிந்தது.

"ஆஸ்ட்ரோஜெனிசிஸ் இம்பர்ஃபெக்டா' நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முதன்முதலாக அரசு சாரா நிறுவனமாக "அம்ரிதவர்ஷினி சாரிடபிள் சொசைட்டியை' திருவனந்தபுரத்தில் லதா நாயர் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் சார்பில் எனக்கு பொது மக்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. தொலைக்காட்சி மூலமாகவும் இந்த எலும்பு நோய் குறித்த விழிப்புணர்வையும் மாற்றுத்திறனாளிகளுக்குக் காட்ட வேண்டிய கரிசனம் குறித்தும் பேசுகிறேன். கேரள தனியார் சானல்களில் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறேன்".
வீல்சேரில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தாலும்... எலும்புகள் முறியலாம் என்ற அபாயம் இருந்த போதும், தன்யா பயணிக்கிறார். சமீபத்தில் அமெரிக்கா வரை சென்று வந்திருக்கிறார். அமெரிக்காவிலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"மாற்றுத்திறனாளிகளிடம் "இதுதான் உனது எல்லை.. இதற்கு மேல் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.." என்று எல்லைகளை நிர்ணயிக்காதீர்கள்.. அவர்கள் மற்றவர்களுடன் பேசப் பழக அனுமதியுங்கள். "என்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கை அவர்களுக்குள் துளிர்விடும்..'' என்கிறார் தன்யா.

நாம் சாதிக்க பிறந்தவர்கள்
புதுமை விரும்பி...

No comments:

Powered by Blogger.