மாணவர்களை இயற்கை விவசாயிகளாக்கிய அரசு பள்ளி - பசுமை விகடனில் -
மாணவர்களை ‘இயற்கை விவசாயி’ ஆக்கிய அரசுப் பள்ளி!
மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வியை மட்டும் போதிக்காமல், களத்தில் இறக்கிவிட்டு, ‘இயற்கை விவசாயி’களாக மாற்றிவருகிறது, கரூர் மாவட்டத்திலுள்ள ஓர் அரசுப் பள்ளி. கல்வியுடன் இயற்கை விவசாயம், வாழ்வியல் முறைகளையும் போதித்து வருகிறார்கள் இந்தப் பள்ளி ஆசிரியர்கள். அதோடு, தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குச் சுரைக்காய் விதையைக் கொடுத்து, அதை அவர்களின் வீட்டில் வளர்க்கச் சொல்லி, முதல் அறுவடைக்குப் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், புனவாசிப்பட்டியில் இயங்கி வருகிறது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்தப் பள்ளியில் 150 மாணவ, மாணவிகள் பயின்றுவருகிறார்கள். இங்கு இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிவரும் கோபிநாதன், பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயகுமாரியின் ஆலோசனையோடு பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தீபாவளிக்கு வீட்டில் வெடி வெடிக்காமல் சூழலைக் காத்த மாணவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசு; வித்தியாசமான முறையில் மாணவர்களை வரவேற்பது; லட்சியக் கனவுகளை விதைக்கும் திட்டம்; பள்ளியில் பிறந்தநாளைக் கொண்டாடுதல்; பிறந்தநாள் பரிசாக மரக்கன்றுகள் வழங்குவது; ஊர்மக்களைக்கொண்டு கல்விச் சீர் விழாவை நடத்துதல் எனப் பல அதிரடிகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார் கோபிநாதன். இதற்காகத் தன் பெயருக்கு முன்னே, ‘புதுமை விரும்பி ஆசிரியர்’ என்ற அடைமொழியை வைத்திருக்கிறார்.
மாணவர்களை வீட்டில் விவசாயம் செய்யவைக்க நினைத்தோம். அதனால், சுரைக்காய் வளர்க்கும் போட்டியை அறிவித்தோம். பள்ளி வளாகத்துல இருந்த ஒரு காலி இடத்துல, மாணவர்களைவெச்சே அவரை, மிளகாய், தக்காளி, வெண்டைனு சாகுபடி செய்தோம்.
சமீபத்தில் மாணவர்களுக்கு ஆளுக்கொரு சுரை விதையைக் கொடுத்து ஒரு போட்டி வைத்திருக்கிறார். அனைவரும் தங்கள் வீடுகளில் அதை இயற்கை முறையில் அவர்களே வளர்க்க வேண்டும் என்பதுதான் போட்டி. பள்ளியிலிருந்த ஆசிரியர் கோபிநாதனை சந்தித்துப் பேசினோம். “மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வியோடு, வாழ்வியல் கல்வியையும் கொடுக்கணும்னு நினைச்சேன். நான் அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதோடு, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மூலமா கிடைச்ச அறிவு, என்னை இயற்கையை நோக்கி உந்தித் தள்ளிச்சு. அதனால எனக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வம் உண்டானது. மாணவர்களைக்கொண்டு பள்ளி வளாகம் முழுக்க மரக்கன்றுகளை நடவெச்சோம். இதுக்கு தலைமை ஆசிரியையும், மற்ற ஆசிரியர்களும் உதவி பண்ணினாங்க. இப்போ பள்ளி வளாகத்துக்குள்ள 70 மரங்கள் உருவாகியிருக்கு. பள்ளி வளாகத்துல இருந்த காலி இடத்துல மாணவர்களைவெச்சே அவரை, மிளகாய், தக்காளி, வெண்டை, கீரைகள்னு இயற்கை முறையில சாகுபடி பண்ண வெச்சோம். அதுல அறுவடையான காய்கறிகளையும் கீரையையும் சத்துணவுக்குப் பயன்படுத்திக்கிட்டோம். அதன் ருசியில பசங்க சொக்கிப் போயிட்டாங்க. பிறகு, பள்ளி வளாகத்துல இருந்த காலி இடங்கள்ல கற்றாழை, துளசினு மூலிகைச் செடிகளையும் வளர்த்தோம். அதையெல்லாம் பராமரிக்கறதும் மாணவர்கள்தான். இதற்காக, ‘சூழல் மன்றம்’கிற அமைப்பை உருவாக்கினோம். இன்னொருபுறம் மாணவர்களைவெச்சு, சட்டமன்ற அமைப்பை உருவாக்கி, வேளாண்மைக்குத் தனியாக அமைச்சரை நியமிச்சோம். அவங்க இந்தச் செடி, மரங்களைப் பராமரிக்க ஆரம்பிச்சாங்க. இஙகே வீணாகும் தண்ணியை மரங்களுக்குப் பயன்படுத்திக்கிட்டோம்’’ என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய, தலைமை ஆசிரியை விஜயகுமாரி, “மாணவர்களை வீட்டில் விவசாயம் செய்யவைக்க நினைத்தோம். அதனால், சுரைக்காய் வளர்க்கும் போட்டியை அறிவித்தோம். இங்கு படிக்கும் 150 மாணவர்களுக்கும் தலா ஒரு சுரைக்காய் விதையை ஜூலை மாத இறுதியில் வழங்கினோம். அதை அவர்களே, வீடுகளில் விதைத்து, சுரைக்கொடியை வளர்த்தெடுக்க வேண்டும். தினமும் வீட்டுப்பாடம் செய்வதுபோல், அவர்களே அதற்குத் தண்ணீர் ஊற்றி, இயற்கை முறையில் வளர்க்க வேண்டும் என்று அறிவித்தோம். அத்தனை மாணவர்களும் அதை ஆர்வமாக ஏற்றுக்கொண்டு அர்ப்பணிப்போடு வளர்த்தார்கள். நான்காம் வகுப்பு படிக்கும் மோனிகா, முதலில் சுரைக்காயை அறுவடை செய்து, முதல் பரிசைப் பெற்றார். மோகனப்பிரியா இரண்டாவது பரிசையும், மோகன்ராஜ் மூன்றாவது பரிசையும் பெற்றனர். அவர்களுக்கு தலா ஒரு சீத்தாப்பழ மரக்கன்றை வழங்கினோம். அதேபோல் அடுத்தடுத்து ஆர்வமாகச் சுரை அறுவடையைச் செய்துகாட்டிய, 20 மாணவர்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினோம். தங்கள் வீட்டுப் பயன்பாடு போக, சுரைக்காயை விற்பனை செய்யும் அளவுக்கு அத்தனை மாணவர்களும் சுரை வெள்ளாமையைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அடுத்தகட்டமாக, பூசணிக்காய், வெண்டை, கொத்தவரை என்று விதைகளைக் கொடுத்து, ‘இயற்கை விவசாயப் போட்டி’ வைக்கப்போகிறோம்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.
முதல் பரிசை வென்ற மகிழ்ச்சியிலிருந்த மாணவி மோனிகாவிடம் பேசினோம்.
“இந்தப் போட்டியைப் பத்தி சார் சொன்னதும் ரொம்பவும் ஆர்வமாகிடுச்சு. எப்படி விதை ஊணுறது, தண்ணி பாய்ச்சுறதுனு சாரே சொல்லிக்கொடுத்தாரு. எங்க அப்பாவும் தினமும் சொல்லிக்கொடுப்பாரு. பூச்சி வந்தால், அதை இயற்கை முறையில எப்படி அழிக்கறதுன்னும் சொல்லுவாரு. அதை கவனமாகக் கேட்டு, மனசுல பதிச்சுகிட்டேன். செடிக்கு தினமும் தண்ணி ஊத்துவேன். களை பறிப்பேன். வீட்டுல மாடுக போடுற சாணம் கலந்த குப்பையைச் சுரை கொடிக்கு உரமாகப் போட்டேன். கொடி நல்லா வளர்ந்துச்சு. நான் ஆசையா வளர்த்த சுரைச் செடியில முதல் சுரைக்காய் காய்ச்சுது. அதனால, எனக்கு முதல் பரிசு கிடைச்சுது. இந்த லீவுல அப்பாவோடு சேர்ந்து வயல்ல விவசாய வேலைகளையும் பார்க்கலாம்னு இருக்கேன்” என்று பெரிய மனுஷிபோல் பேசி வியக்க வைத்தார் மோனிகா.
‘‘மாணவர்களை வீட்டில் விவசாயம் செய்ய வைக்க சுரைக்காய் வளர்க்கும் போட்டியை அறிவித்தோம். இங்கு படிக்கும் 150 மாணவர்களுக்கும் தலா ஒரு சுரைக்காய் விதையை கொடுத்து வளர்க்கச் சொன்னோம்.’’
No comments: