புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

சேகுவேரா

மாவீரன் சேகுவேராவின் நினைவு நாள்!

"'கோழையே, சுடு! நீ சுடுவது சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!'' இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!

மணி 1.10... மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.

புரட்சி என்ற சொல்லை பயன்படுத்துவோர் தவிர்க்க இயலாத மந்திரச்சொல் "சே"குவேரா.

கடும் ஆஸ்த்துமா தொல்லையோடு தன் குழந்தை பருவத்தில் சிரமப்பட்ட சேகுவேராவிற்கு இறுதி வரை அது தீர்ந்தபாடில்லை.

தனது மோட்டார் சைக்கிளில் தென்அமெரிக்க நாடுகளை சுற்ற புறப்பட்ட குவேரா அதன் தாக்கத்தால் தொடர்ந்து பயணித்து, தொழுநோயால் பாதிக்கப்பட்ட காங்கோ மக்களுக்கு உதவி, பின் பிடல் காஸ்ட்ரோவின் நட்பினால் கியூப புரட்சியில் பங்கெடுத்து புரட்சி அரசின் அமைச்சரும் ஆனவர்.

அமைச்சராக இருந்தாலும் தனது உடலுழைப்பை தேசத்துக்கு வழங்கி தன் உடல் தொந்தரவுகளையும் மீறி தன் உடலுழைப்பையும் வழங்கியவர்.

பொலீவிய சோகங்களை கேட்ட சேகுவேரா தன்னால் ஒரு இடத்தில் அடைந்து கிடக்க முடியாதென்று சொல்லி அமைச்சர் பதவியை தூர எறிந்து பொலீவிய புரட்சியில் பங்கெடுத்தபோது ராணுவ பிடியில் சிக்கி சிஐஏ வினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மாவீரன் "சேகுவேரா" இறப்பதற்கு
சில நிமிடங்கள் முன்பு...!!!!!

1967 அக்டோபர் 8.... தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.

காலை 10.30... யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் சேகுவேரா கடந்து செல்கிறார்.

வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.

நண்பகல் 1.30... அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு சேகுவேராவின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள்.

அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.

பிற்பகல் 3.30... காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித்
துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ''நான்தான் சேகுவேரா. நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது
உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்'' என்கிறார்.

மாலை 5.30... அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக 'சே'வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் சேகுவேரா கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.

இரவு 7.00... 'சேகுவேரா பிடிபட்டார்' என சி.ஐ.ஏ-வுக்குத் தகவல் பறக்கிறது. அதே சமயம், 'சேகுவேரா' உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.

தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ''இது என்ன இடம்?'' என்று சேகுவேரா கேட்கிறார்.

பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ''பள்ளிக்கூடமா... ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?'' என வருத்தப்படுகிறார்.

சாவின் விளிம்பிலும் 'சேகுவேரா'வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

1967 அக்டோபர் 9... அதிகாலை 6.00...

லாஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது.

அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.

கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் சேகுவேராவைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி.

அமெரிக்காவுக்குச் சிம்மசொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது  சேகுவேராதான் என அமெரிக்காவுக்கு  தகவல் பறக்கிறது.

சேகுவேராவின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன.

தான் கொண்டுவந்த கேமராவில் சேகுவேராவை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ்.

கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் சேகுவேராவின் அப்புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

காலை 11.00... சேகுவேராவைச் சுட்டுக்கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது.

யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. 'மரியோ ஜேமி' என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறான்.

நண்பகல் 1.00... கைகள் கட்டப்பட்ட நிலையில், சேகுவேராவை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ''முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!'' என்பார் சேகுவேரா. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறான்.

தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு சேகுவேரா கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறான்.

"'கோழையே, சுடு! நீ சுடுவது சேகுவேராவை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!'' என்கிற தனது கடைசி வார்த்தைகளை கேட்டபடியே மரியோவின் துப்பாக்கி தோட்டாக்களை உமிழ்கிறது.

சேகுவேரா இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது.

ஒரு நோயாளி என முடங்கிப்போகாமலும், மருத்துவ பட்டம் பெற்று தானுண்டு தன் வேலையுண்டு என சுயநலமாக இல்லாமலும், அமைச்சர் பதவியை தூர எறிந்து போராட்ட களத்தில் தன்னை மாய்த்துக்கொண்ட சேகுவேரா தியாகத்தினை நினைவு கூர்வோம்.

புரட்சிகளும், விடுதலைப் போர்களும் தோற்றுப் போகும் நாளில் பேசப்படாவிட்டாலும்,  அவை அத்தோடு முற்றாகிப்போவதில்லை, போராட்டங்கள் வீண் போவதில்லை என்பதற்கு பொலீவியா ஒரு உதாரணம்.

தோற்றுப்போய் அழித்தொழிக்கப்படுவதாலேயே விடுதலைக்கான பாதை அடைபட்டும் போவதில்லை.

இது விதை உறக்க காலம்.

விதைகள் முளைத்து தளிர்கள் அரும்பும்...
தழைகள் முதிர்ந்து மரங்கள் வலுப்பெறும்...
விடுதலைக்கனி விரைவில் கிடைக்கும்...

புரட்சி புதைக்கப்படுவதில்லை.
விதைக்கப்படுகிறது.

புதைந்து கிடக்கும் விடுதலைக்கான எண்ணங்கள் விரைவில் முளைவிடும்

புரட்சியை பாதுகாக்க சேகுவேரா வின் நினைவுகளை போற்றுவோம்.


No comments:

Powered by Blogger.